History

Want create site? Find Free WordPress Themes and plugins.

அருங்கலை ஆர்வலர் அந்தோணி வாட்சன் பிரப்

Artifacts - Rev.A.W.Brough
Artifacts – Rev.A.W.Brough

கிறித்துவ சமயப் பணிக்காகவும், கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு நிர்வாகப் பணிக்காகவும் நாடு காணும் ஆவலினாலும் தமிழகம் வந்த மேனாட்டவர் பலர் தாம் சார்ந்த பணிகளுக்கு அப்பால் மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல், ஓலைச்சுவடி, வரலாறு, நாட்டுப்புறவியல் முதலிய பல்வேறு துறைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வுகளைத் தொடங்கியதுடன் அத்துறையில் தமிழ்நாட்டவர் பலரையும் ஈடுபடச் செய்தனர். பலர் கல்வி, மருத்துவப் பணிகளிலும் அரிய தொண்டாற்றினர்.

கொங்கு மண்டல சமயப் பணி

கொங்கு மண்டலத்தில் முதலில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களே கால் பதித்தனர். 1608-ஆம் ஆண்டு இராயந்து என்பவர் தாராபுரத்தில் முதல் தேவாலயம் கட்டி சமயப் பணியைத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகளில், தம்மை ‘மேனாட்டு அந்தணன்‘ என்றும், ‘தத்துவ போதகர்‘ என்றும் அழைத்துக் கொண்ட ராபர்ட் டி நொபிலி ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் சமயப் பணிபுரிந்தார்.

பிராட்டஸ்ட்டென்ட் கிறித்துவப் பணி டென்ட் கிறித்துவப் பணி லண்டன் மிஷன் சங்கத்தாரால் 1827-இல் சேலம் மாவட்டம் பகுதியில் ஹென்றி கரிஸ்ப் என்பவராலும், 1830-இல் கோவை பகுதியில் வில்லியம் ஆடிஸ் என்பவராலும் முதன் முதலில் தொடங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் எம்.டி. கோபர்ன் என்பவரும், கோவை மாவட்ட ஆட்சியர் ஜான் சல்லிவன் என்பவரும் முழு ஓத்துழைப்புத் தந்தனர்.

பிரப் நியமனம்

1861-இல் ஆஸ்திரேலியாவில் பிராட்டஸ்ட் டென்ட் மத போதகராகப் பயிற்சி பெற்ற அந்தோணி வாட்சன் பிரப் லண்டன் மிஷன் பிராட்டஸ்ட்டென்ட் சங்கத்தாரால் 1864-இல் கோவையில் பணி நியமனம் செய்யப்பட்டார். பிரப் 1897-இல் ஈரோட்டிற்குப் பணி மாறுதல் பெற்றார். ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போல அல்லாமல் பிராட்டஸ்ட்டென்ட் பாதிரியார்கள் குடும்பத்துடன் பணிபுரிய வந்ததால், பிரப் தன் மனைவியார் ரோஸ்ட்டா ஜேன் பிரப், மகன் ஹெர்பர்ட் பிரப் ஆகியோருடன் ஈரோடு வந்தார், ஈரோடு பகுதியில் பள்ளிகளும், பள்ளிக்குச் செல்வோரும் மிகக் குறைவாக இருப்பதைப் பிரப் அறிந்தார்.

கல்விப் பணி

சென்னை மாநில ஆளுநர் தாமஸ்மன்றோ காலத்தில் கோவை மாவட்டத்தில் கல்விக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போதைய கோவை மாவட்ட மக்கள் தொகை 6,38,199 எனக் கணக்கிடப்பட்டது. கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்டப் பகுதிகளும், கரூர், கொள்ளேகால் வட்டங்கள் அடங்கியதே அன்றைய கோவை மாவட்டம் ஆகும்.

மாவட்டம் முழுவதும் பள்ளி சென்றேர் எண்ணிக்கை 8,930 மட்டுமே ஆகும். அதாவது 1.39% பேரே கல்வி கற்றனர், மாவட்டம் முழுவதும் பள்ளி சென்ற பெண்கள் எண்ணிகை 82 ஆகும். எனவே கல்விப் பணி அளிப்பதில் பிரப் முனைந்து ஈடுபட்டார், ஈரோடு நகரம் இணைந்த பகுதிகளில் 14 பள்ளிகளும் கிராமப் புறங்களில் 80 பள்ளிகளுமாக 94 பள்ளிகளை பிரப் ஏற்படுத்தினார். முதலில் ஆசிரியர்களாக கிறித்துவ சமயப் பரப்புதலில் பயிற்சி பெற்ற உபதேசியார்களே நியமிக்கப்பட்டனர். இப்பள்ளிகள் ‘மிஷன் பள்ளிகள்‘ எனப்பட்டன.

ஈரோடு நகரில் ஏற்படுத்திய பள்ளியில் லண்டன் மிஷன் சங்க உதவியுடன் ஏழை மாணவர்களையும். வெளியூர் மாணவர்களையும் விடுதியில் தங்க வைத்து இலவசமாக மூன்று வேளை உணவும் அளித்தார். அதனால் அப்பள்ளியை ‘போர்டிங் பள்ளி‘ என்று மக்கள் அழைத்தனர். அப்பள்ளி வளர்ந்து ‘லண்டன் மிஷன் பள்ளி‘ என்ற பெயர் மாறி சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியாக இன்று இருந்தாலும் அப்பள்ளியைக் கிராம மக்களும், முதியோரும் இன்றும் கூட ‘போர்டிங் பள்ளிக்கூடம்‘ என்றே அழைக்கின்றனர்.

லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியையும் பிரப் ஈரோட்டில் தோற்றுவித்தார். பின் அப்பள்ளி மூடப்பட்டு சேலம் நகரில் தொடங்கப்பட்டது. பள்ளி இடம், தளவாடங்களை மாவட்ட கழகம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது, நடுநிலைப் பள்ளியாக எட்டாம் வகுப்பு வரை அப்பள்ளி தொடர்ந்தது.

1926-இல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் பிரப் நிறுவினார். 5-ஆம் வகுப்புக் கற்றவர்கள் ‘லோயர் கிரோடு‘ ஆசிரியராகவும். 8-ஆம் வகுப்பு கற்றவர்கள் ‘ஹையர் கிரோடு‘ ஆசிரியராகவும் பயிற்சி பெற்றனர். பின் பள்ளி இறுதித் தேர்வு பெற்றவர்கள் ‘செகண்டிரி கிரோடு‘ ஆசிரியர் பயிற்சி பெற்றனர். ஏழை, எளிய மாணவர் பலர் அப்பள்ளிகளில் படித்து ஆசிரியராயினர்.

பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கோழி வளர்ப்பு, பால் பண்ணை, பாய் நெய்தல், கூடை செய்தல், தோட்ட வேலை ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்பட்டன. ‘செயல்முறைப் பயிற்சிப் பள்ளி‘ என்று இப்பள்ளி அழைக்கப்பட்டது. அவ்வாறான பள்ளிகள் இந்தியாவில் பஞ்சாப் மாநில ‘மோகா‘ என்ற ஊரிலும், ஈரோட்டிலும் மட்டுமே அன்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தியடிகள் ஈரோட்டுக்கு நான்காம் முறையாக 11.2.1934 அன்று வந்தபோது இப்பயிற்சிப் பள்ளி மாணவர்கள் தாங்கள் நெய்த பாயை, பிரப் அனுமதியுடன் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனர்.

மருத்துவப் பணி

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரோட்டுப் பகுதியில் பிளேக், மலேரியா, காலரா, அம்மை முதலிய நோய்களால் மக்கள் பெரிதும் துன்புற்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தக்க மருந்தும், வழிப்புணர்வும் இல்லாததே இதற்குக் காரணம். நாட்டு மருத்துவம் பெரிதும் பலனளிக்கவில்லை. இந்நிலை கண்டு வருந்திய பிரப், 1909-ஆம் ஆண்டு வேலூரிலிருந்து டாக்டர் மைகன்சி ரீஸ் என்ற அம்மையாரை அழைத்துக் கொண்டு வந்து தன் பங்களா முன்னர் கொட்டகை அமைத்து மக்களுக்கு இலவச மருத்தும் செய்தார். மூன்றாண்டுகள் பணியாற்றிய மைகன்சிரீஸ் திருமணம் செய்து கொண்டு விடை பெற்றுச் சென்றுவிட்டார்.

மருத்துவத்தின் தேவை அதிகமாகவே டாக்டர் மிஸ் ஹல்டா போலார்டு என்ற அம்மையாரை அழைத்துக் கொண்டு வந்து மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். சிறப்பான மருத்துவப் பணியால் எல்லோராலும் இவர் ‘போலார்டம்மா‘ என்று அன்பாக அழைக்கப்பட்டார். ‘பனங்காடு‘ என்ற பகுதியை விலைக்கு வாங்கி பிரப் மருத்துவமனை கட்டத் தொடங்கினார். மருத்துவமனைக்குக் கோவை மாவட்ட ஆட்சியர் ஆர். ஹெமிங்வே 28.10.1912 அன்று அடிக்கல் நாட்டினார். மருத்துவமனை கட்டும்போதே நோயாளிகளைப் பாயில் படுக்க வைத்து மருத்துவம் பார்த்தனர். பிரசவம், அறுவைச் சிகிச்சைகள் இரவு நேரத்தில் அரிக்கேன், பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் நடைபெற்றன. பைகாரா மின் உற்பத்தி தொடங்கயபின் 1933-ஆம் ஆண்டுதான் மருத்துவமனைக்கு மின்சாரம் வந்தது. 1923-ஆம் ஆண்டு 9 மாத மகப்பேறு பயிற்சியும், 1933-ஆம் ஆண்டு மூன்றாண்டு மருத்துவச் செவிலியர் பயிற்சியும் தொடங்கப்பட்டது.

தொடக்க காலத்தில் பெரும்பாலும் மருத்துவமனைக்குச் செல்லாமல் நோய்களால் துன்புற்ற இஸ்லாமியப் பெண்களுக்குச் சிறப்பாக மருத்துவம் செய்ததால் மக்களால் இம்மருத்துவமனை ‘கோசா ஆஸ்பத்திரி‘ என்று அழைக்கப்பட்டது. ‘லண்டன் மிஷன் மருத்துவமனை‘ என்ற பெயர் மாறி சி.எஸ்.ஐ. மருத்துவமனையாக இன்று மாற்றம் பெற்ற மருத்துவமனை விரிவடைந்திருந்தாலும் கிராமப்புற மக்களும், முதியவர்களும் இம்மருத்துவமனையை இன்றும் ‘கோசா ஆஸ்பத்திரி‘ என்றே அழைத்து வருகின்றனர்.

முதல் உலகப் போரின் போது படையில் பணியாற்றிய பிரப் அவர்களின் மகன் ஹெர்பர்ட் பிரப் போர்களத்தில் காலமானர். தன் மகன் ஹெர்பர்ட் பிரப் நினைவாக பிரப் சென்னிமலையில் மருத்துவமனையைத் தொடங்கினார்.

கிறித்துவ தேவாலயம்

ஈரோடு நகரில் பிராட்டஸ்ட்டென்ட் கிறித்துவர்கள் வழிபாடு நடத்த பழைய இரயில்வே நிலையம் அருகில் 1892-ஆம் ஆண்டு சிறு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. மக்கள் தொகை பெருகியதாலும், நகரம் மேற்கு நோக்கி விரிவடைந்ததாலும் புதிய தேவாலயம் கட்ட பிரப் எண்ணினார். நகர் நடுவில் இடம் வாங்கி, 1927-இல் தேவாலயம் கட்டத் தொடங்கித் தேவாலயப் பணி 1930-இல் முடிவுற்றது.

கலை ஆர்வம் கொண்ட பிரப் இஸ்லாமிய மினார் (அல்லது மினாரட்) அமைப்புக் கொண்ட இந்தோ சினாரிக் என்னும் கட்டிடக் கலைப் பாணியில் அத்தேவாலயத்தை மிக அழகிய முறையில் கட்டி முடித்தார்.

Corner Stone
Corner Stone

கட்டிடப் பணி தொடங்கும் போது அஸ்திவாரக் கல்லில் ‘இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்‘ என்று தமிழில் பதித்துள்ளார். 1930-ஆம் ஆண்டு தேவாலயம் திறப்பு விழா செய்தபோது ‘அசரியா‘ என்னும் தமிழ் கிறித்துவப் பாதிரியாரை முதன் முதலில் பணியில் அமர்த்தினார்.

கட்டிட ‘முகப்பில்கடவுள் அன்போ‘ என்று தமிழ் எழுத்திலும் ‘யா குதா‘ (ஒருவரே கடவுள்) என்று அரபு மொழியிலும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவாலயப் பணி நடைபெற்றபோது 18.06.1928 அன்று பிரப் அவர்கள் துணைவியார் ரோஸ்டார் ஜேன் பிரப் காலமானார். அவர் கல்லறை மட்டுமே தேவாய வளாகத்தில் உள்ளது.

பாப்லியுடன் இணைந்து பணி

Rev. H.A. Popley
Rev. H.A. Popley

 

ஈரோட்டில் பிரப் பணியாற்றும் போது உடன் பணியாற்றியவர் எச்.ஏ. பாப்லி என்பவர் ஆவார். அவர் நல்ல தமிழ் புலமை உடையவர். இருவரும் இணைந்து ‘ஈரோடு இலக்கியக் கழகம்‘ என்ற அமைப்பைத் தொடங்கிச் சொற்பொழிவு நிகழ்வுகள் பல நடத்தினார்கள்.

பாப்லி 1932-இல் திருக்குறள் அறத்துப்பால் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டவர். ஒருமுறை ஈரோடு இலக்கியக் கழகத்தில் வெளிநாடு சென்று வந்த தமிழர் ஆங்கிலத்தில் பேச எச்.ஏ. பாப்லி அதைத் தமிழில் மொழிபெயர்த்தாராம். மறை மலையடிகள் தலைவராகப் பாப்லி விளங்கினார். ‘நவீனக் கல்வி‘ என்ற பெயரில் முத்திங்கள் இதழ் ஒன்றை நடத்தினார்.

பிரப், தமிழ் சரியாகப் பேச இயலாதவர், இருப்பினும் பேச முயற்சிப்பார். ஒருமுறை சூரம்பட்டி என்னும் ஊரில் பிரப் ஒரு நிகழ்வில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களை நோக்கி பிரப் ‘நான் தமிழில் பேசட்டுமா! இங்கிலீசில் பேசட்டுமா?‘ என்று கேட்டாராம் மக்கள் ‘தொரை! நீங்க இங்கிலீசில் பேசினாலும் தமிழில் பேசினாலும் இரண்டுமே எங்களுக்கு விளங்காது. ஆகவே எதில் வேண்டுமானாலும் பேசுங்கள்‘ என்றார்களாம்.

கலைப்பொருள் ஆர்வம்

ஈரோட்டில் பணி தொடங்கிய நாளிலிருந்தே கலைகளிpலும் கலைப் பொருள்களிலும் மிகுந்த ஆர்வத்தோடு விளங்கிய பிரப், செல்லும் இடங்களிலெல்லாம் பல கலைப் பொருள்களைச் சேகரித்தார். கலைநயம் மிக்க பல பொருள்களோடு வீட்டு உபயோகப் பொருட்களும் பூசைப்பொருட்களும் அவருக்குப் புதுமையாகத் தோன்றியதால் அவற்றையும் தொகுத்தார்.

தான் முன்னின்று கட்டிய தேவாலயத்தைக் கலையநயத்துடன் கட்டினார். ஈரோட்டைப் பற்றிய கட்டுரை ஒன்றில் ‘குட்டித் தாஜ்மகால்‘ என ஒருவர் இத்தேவாலயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சமயப் பணி பரிந்த மேனாட்டவர் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் சொந்த நாடு செல்வது வழக்கம். பிரப் அப்படிச் செல்லும்போது அவ்வப்போது தாம் சேகரித்த கலைப் பொருள்களையும் கொண்டு சென்று தன் ஆஸ்ரேலிய வீட்டில் பாதுகாப்பாக வைத்தார்.

பணி ஓய்வு பெற்று 1934 இறுதியில் பிரப் ஆஸ்திரேலியா சென்றார். அப்போது அவர் வீட்டில் மொத்தம் 295 தமிழகக்கலைப்பொருள்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவில் தன் தமிழகப் பணி குறித்து விளக்கும் போதும், உரையாற்றும் பொழுதும் தாம் சேகரித்த கலைப் பொருட்களைக் காட்டி விளக்கம் கூறுவது பிரப் வழக்கம். பிரப் 1936-இல் காலமானார்.

அவர் காலமான பின்னும் அவர் சேகரித்த கலைப்பொருட்கள் அவர் வீட்டிலேயே இருந்தன. பிரப் அவர்களின் சகோதரியின் மகள் ரூத் மெக்கன்சி என்பவர் பிரப் கலைப் பொருட்கள் அனைத்தையும் ஆஸ்திரேலியத்தலைநகர் சிட்னியில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். அங்கு அவை ‘பிரப் சேகரித்த கலைப் போருட்கள்‘ என்று காட்சிப்படுத்தப் பட்டன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.